எரிச்சல் படுத்தும் சென்னை திரையரங்குகள்
சென்னை என்பது தமிழ்நாட்டின் தலைநகரம் மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் தலைநகரமும் கூட. அப்படிப்பட்ட சென்னையில் உள்ள சில தியேட்டர்களுக்கு குடும்பத்தோடு படம் பார்க்கச்செல்லும்போது ஏற்படும் அனுபவங்கள் எரிச்சல் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நம்மை கோபம் கொள்ளச்செய்கின்றன.
2012 ருத்ரம் என்று ஒரு படம். குடும்பத்தோடு பார்ப்பதற்காக எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டருக்கு சென்றேன். இருக்கைகளின் சென்று அமர்வதற்காக அவர்கள் போட்டு வைத்திருக்கும் நடை பாதை வழுக்கு மரத்தை விடவும் கொடுமையாக இருக்கிறது. அதோடு போதுமான விளக்கு வெளிச்சமும் இல்லாததால் மிகவும் செங்குத்தாக இறங்குவது போல உள்ள அந்த பாதையில் கண்டிப்பாக நம்மால் விழாமல் நடக்க முடியாது. அப்படி விழாமல் நடக்கவேண்டும் என்றால் ஒரு சர்க்கஸ் காரனின் லாவகம் நமக்கு வேண்டும். இடைவேளை சமயத்தில் தியேட்டர் ஊழியர் ஒருவர் ஒரு பெண்ணிடம் தரமில்லாத வார்த்தைகளால் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். என்ன விசயம் என்று கேட்டதில் குழந்தைகளோடு படம் பார்க்க வந்த அந்த பெண்மணி கொண்டு வந்த தின்பண்டத்தை பிடுங்கி வைத்துக்கொண்டு திருப்பிக்கொடுக்க மாட்டேன் என்று அடாவடி செய்திருக்கிறார் தியேட்டர் ஊழியர். கன்னத்திலும் முதுகிலும் நாலு போடலாம் போல அவ்வளவு கோபம் அடக்கிக்கொண்டு வந்து விட்டேன்.
சரி அதுதான் பரவாயில்லை என்றால் டாய்லெட் அதைவிட கொடுமை. அதிலும் லேடீஸ் டாய்லெட் பக்கம் எட்டிப்பார்க்கவே முடியவில்லை என்று என் மனைவி திட்டிக்கொண்டே வந்தார். சென்னையில் அதிலும் சினிமாத் தொழிலின் மிக முக்கியமான இடத்தில் அருணாச்சலம் அமைந்துள்ள இந்த தியேட்டர் இந்த இலட்சணத்தில் இருந்தால் சினிமாத்தொழில் எப்படி உருப்படும்.
இதில் வெட்கக்கேடு என்னவென்றால்... தியேட்டரின் பெயரிலும் உரிமையிலும் மரியாதைக்குரிய முன்னாள் நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரன் பெயர் இருப்பது தான். சினிமாக்காரர்கள் நடத்தும் தியேட்டரே இப்படி இருந்தால் மற்றவர்கள் நடத்தும் தியேட்டர்களை பற்றி சொல்லவா வேண்டும்.
நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் இராம.நாராயணன், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி இராமனாதன், மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் எல்லாம் இங்கே படம் பார்த்ததில்லை போல. ஏதாவது செய்ங்க சார். ரசிகன் பாவம்.
Comments
Post a Comment