கடுகு | ஒரு தவறான படம். அதை சூர்யா தயாரிக்கலாமா?

நடிகர் சூர்யா கவனத்திற்கு...
சினிமா என்கிற வீரியமிக்க கலையை, தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே கொஞ்சம் டெக்னிக்கலாக தமிழ் சினிமா அரைக்கும்போது நிறைய ஆதங்கமாக இருக்கும். ஓடுகிற படங்கள் கூட பெரும்பாலும் யதார்த்தம் இல்லாமல் சினிமாத்தனங்களுடன் இருக்கும் நிலையில் சினிமாவையும் சமூகத்தையும்
பிரதிபலிக்கிற, சினிமாவையும் சமூகத்தையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற திரைப்படங்கள் ஒரு சிலவாவது வரவேண்டும் என்ற ஆதங்கம் நீண்ட நாட்களாகவே இருந்தது.
அதையும் மீறி கடுகு போல ஒரு சில படங்கள் வந்தாலும் முக்கால் வாசி படத்திற்கு பின், முழுவதும் சினிமாவாகி மசாலா வாசம் தியேட்டரைத்தாண்டி வீடு வரை வந்துவிடுகிறது. இன்னொன்று கடுகு படம் பேசிய உளவியல்…. மிக மிக மோசமான உளவியல்… இந்த சமூகம் பெண்கள் மீது திணிக்கிற புனித அழுக்கின் இன்னொரு சாட்சி தான் கடுகு.
இடைநிலை பள்ளிக்கல்வி பயிலும் ஒரு சிறுமியை அமைச்சராக இருக்கும் அரசியல்வாதி ஒருவன், உள்ளுர் அரசியல்வாதியின் துணையுடன் பாலியல் வன்புணர்வு கொள்ள முயல்கையில் கதைநாயகி கதாபாத்திரத்தின் உதவியால் பாலியல் வன்புணர்வில் இருந்து தப்பிக்கிறாள். அதில் பித்துபிடித்தவள் போல ஆகிறாள். பேய் பிடித்திருக்கிறதோ என்று கோயிலுக்கு அழைத்துச்செல்கிறாள் அந்த சிறுமியின் அன்னை. 10ம் வகுப்பு கூட இருக்காதென்று நினைக்கிறேன். அவ்வளவு சின்னஞ்சிறிய பெண், நீச்சல் தெரிந்தும் தண்ணீருக்குள் மூழ்கி அத்தனை காத்திரமாக தற்கொலை செய்துகொள்கிறாள். இங்கே தான் பிரச்சினை.
எவனோ ஒரு கேடு கெட்டவன், தன்னை தொட்டுவிட்டதால் தான் செத்துப்போய்விட வேண்டும் என்று அந்த சிறுமிக்கு எது அறிவுறுத்தியது? யார் அறிவுறுத்தினார்கள். படம் பார்க்கும் அந்தப்பெண் வயதுடைய சிறுமியினர் யாருக்காவது இதே மாதிரி நிகழ்ந்தால் செத்துப்போக வேண்டும் என்று வலியுறுத்துகிறதா கடுகு. அதைத்தான் கடுகு படத்தின் கருத்தியலாக, பேசுபொருளாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? புனிதம், கற்பு என்கிற விசயங்களை வைத்து கலாச்சார விலங்குகள் பூட்டி பெண்களை ஏமாற்றும் வேலை தொடரவேண்டும் என்று கடுகு நிர்ப்பந்திக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?
நடிகர் சூர்யா நல்ல விசய்ங்கள் நடக்கவேண்டும் என்ற சிந்தனை உடையவர் தான். ஆனால் இது போன்ற கதைகளை தயாரிக்கும் முன் இப்படியான சீரியஸான, அல்லது வேறுவகை சினிமாக்கள் அதன் உள்ளீடாக கொண்டிருக்கும் பழைய பஞ்சாங்க, உளவியலையும் அரசியலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
புத்திசாலித்தனமாக வேண்டுமென்றோ, அல்லது அவர்களுக்கு தெரியாமலேயே கூட சிலர் இது போன்ற பழைய பழைய சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் மீண்டும் மீண்டும் கட்டிக்காக்கும் வேலைகளை செய்வார்கள். எந்த சாத்திரமும் சம்பிரதாயமும் நம்பிக்கையும் மனித சமத்துவத்திற்கும் ஆண் பெண் சமத்துவத்திற்கும் எதிராக இருக்கிறதோ, அதெல்லாம் காலப்போக்கில் அழிக்கப்படவேண்டியவையே தவிர, மீண்டும் தூசு தட்டி வெள்ளையடிக்கப்பட வேண்டிய விசயங்கள் அல்ல.
இயக்குநர் விஜய் மில்டன், கதை சொன்ன வகையிலும் காட்சிப்படுத்திய வகையிலும் ரொம்பவே என்னை கவர்ந்தார், ஆச்சர்யப்படுத்தினார். ஒட்டுமொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் நடிகர், நடிகையரும் அசரடித்தார்கள். ஆனால், படம் சொல்ல வந்த கருத்து, தங்கத்தட்டில் பல வருடங்களுக்கு முந்தைய பழைய சோறு போல் ஆகி விட்ட வருத்தத்திலும் ஆதங்கத்திலும் மட்டுமே இதை பதிவு செய்கிறேன்.
- முருகன் மந்திரம்

Comments

Popular posts from this blog

Murugan Manthiram Profile & Songs List

சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர்.