படைப்பாளன் என்பவன் யாரெனில்....
வணக்கம்,
ஒரு எழுத்தாளன் எப்போது படைப்பாளன் ஆகிறான் என்றால், அவனது எழுத்தில் நேர்மையும் அறமும் ஒன்றாக பிணைந்திருக்கும்போது.
நல்ல எழுத்தாளன் எவனுக்கும் தனது ஒவ்வொரு எழுத்தின் எதிர்வினை பற்றியும் அது வாசிக்கிறவனுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் தெரியவேண்டும்.
நான் எழுதுவது என்ன செய்யும் என்று எனக்கே தெரியாது என்றால், நான் எழுத்தாளன் அல்ல. அது எழுத்தும் அல்ல.
ஆனால், கோட்பாடுகளோடு எழுதுகிறவன் அவனுடைய ஒவ்வொரு எழுத்தும் என்ன செய்யும், செய்யவேண்டும் என்பதை அவனே தீர்மானிக்கிறான்.
மொழி கைவரப்பெற்றவன் எல்லாம் படைப்பாளி அல்ல.அதைப்போலவே எழுத்தாளன்கள் எல்லாருமே நல்லவன் என்றும் சிந்தனைவாதிகள் என்றும் சமூக அக்கறை கொண்டவன்கள் என்றும் நினைக்கவேண்டியதும் இல்லை.
மொழிகளை மிக லாவகமாக கையாளும் எழுத்தாளன்களில் பெரும்பகுதி கிட்டத்தட்ட கிரிமினல்களே. படைப்பாளி என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு படைப்புகள் என்பவற்றின் வழியாக தங்களது கோட்பாடுகளையும் விருப்பங்களையும் தேவைகளையும் விஷங்களாக திணிப்பவர்களே.
ஒரு கதையோ கவிதையோ கட்டுரையோ எழுதி முடித்தபின் அதில் இதைத்தான் நான் முன்னிறுத்துகிறேன், இதைத்தான் நான் அர்த்தப்படுத்துகிறேன், இதைத்தான் விவரிக்கிறேன், இதைத்தான் நான் விமர்சிக்கிறேன் என்று சொல்லும் துணிவும் தெளிவும் எழுதியவனுக்கு வேண்டும்.
அந்தத்துணிவும் தெளிவும் இல்லாமல் எழுதப்படும் எழுத்துக்கள், படைப்புகள், அதை எழுதியவனையே பகடி செய்யும்.
தெரிந்தே திணிப்பவன் சமூகத்துரோகி. அவன் சமத்துவத்திற்கும் மனிதநேயத்திற்கும் மனித இனத்துக்கும் எதிரான ஒரு கொடிய நோய்.
உலகின் ஆகக்கொடிய நோய்களில் சில, கவிஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்ற பெயரில் உலவிக்கொண்டிருக்கிறது.
அவர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டியதும், அந்தக்கொடிய நோய்களிடம் இருந்து நம்மை பிரித்தறிதலும் அந்தக்கொடிய நோய்களிடம் இருந்து நம்மை தற்காத்தலும் மிகுந்த எச்சரிக்கையோடும் பகுத்தறிவின் தேடலோடும் செய்யப்பட வேண்டியவை.
செய்க. வாழ்க.
என்றும் அன்புடன்,
முருகன் மந்திரம்,
நவம்பர் 17, 2017.
முருகன் மந்திரம்,
நவம்பர் 17, 2017.
Comments
Post a Comment