Alia Bhatt's Raazi | Hindi Movie Review | Murugan Manthiram


Raazi | Hindi Movie | Alia Bhatt
நாடுகளுக்கு இடையே உள்ள உறவு பற்றி விவரிக்கவும் விமர்சிக்கவுமே நமக்கு சரியாகத் தெரியாத போது, நாடுகளுக்கு இடையேயான உளவு மற்றும் உளவாளி(SPY) பற்றி எப்படி விவரிப்பது, விமர்சிப்பது?. ஆனாலும் இந்தப்படத்தில் எனக்கு புரிந்ததை சொல்கிறேன்.
Raazi ஒரு இந்திய உளவு பற்றிய திரைப்படம். இந்திய உளவாளி பற்றிய திரைப்படம். பொதுவாகவே நான் அதிகமாக கேள்விப்பட்டவை அமெரிக்க, ரஷ்ய உளவுப்படங்கள் தான். இந்திய பாகிஸ்தான், பாகிஸ்தான் இந்திய உளவுப்படங்கள், இதற்கு முன்னால் எத்தனை வந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.
அலியா பட்… பிடிக்கும் என்பது தான் இந்தப்படம் பார்க்க முதல் காரணம். இருந்தாலும் கூகுள்காரி, இந்த படத்திற்கு நல்ல விமர்சனம் இருக்கிறது என்று சொன்னது இரண்டாம் காரணம்.
அலியா பட், ஜெய்தீப், விக்கி கௌசல், அம்ருதா கான்வில்கர், சிஸிர் சர்மா என நடிகர்கள் தேர்வும் நடிப்பும் சிறப்பு.
இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியாக காட்டுகின்ற மலைப்பகுதிகள் எத்தனை அழகாக இருக்கின்றன.
ஒரு நாட்டை பலவீனப்படுத்துவதற்காக உளவு பார்ப்பது, தன் நாட்டை பாதுகாப்பதற்காக உளவு பார்ப்பது என்ற இரண்டு நிலையில் இந்த படம் ஒருவகை.
எனக்குத் தெரிந்த உளவு கதைகளில் இந்தப்படம் அளவுக்கு குடும்ப சென்டிமென்ட் இவ்வளவு தூக்கலாக இருந்த நினைவில்லை.
இரண்டு நாடுகள். இரண்டு குடும்பங்கள். ஒரு நட்பு, ஒரு திருமணம், ஒரு உளவாளி. மணமகளாக செல்லும் உளவாளி. இந்தியாவிற்காக உளவு பார்ப்பதற்காகவே பாகிஸ்தான் மருமகளாகிறாள் ஒரு இந்தியப்பெண்.
தான் செய்வது தன் நாட்டிற்காக செய்யும் பெரும் சேவை என்றாலும் பாகிஸ்தான் இராணுவத்தில் வேலை செய்கிற தன் மாமனார், கணவர், கணவரின் அண்ணன்…. ஆகியோருக்கு துரோகம் செய்வதை எண்ணி எண்ணி உருகி மருகி கண்ணீர் வடிக்கிறாள் உளவாளி மருமகள். தான் மாட்டிக்கொண்டு விடக்கூடாது என்பதற்காக சில கொலைகளையும் செய்ய நேரிடுகிறது. அதில் ஒருவர், கணவரின் அண்ணன்.
இப்படியாக இந்த இளம் உளவாளி…. ஒரு கட்டத்தில் பாகிஸ்தானிடம் மாட்டிக்கொள்கிறாள். வேறு வழி இல்லாமல் உளவாளியையும் அவளது கணவனையும் ஒரே குண்டில் போட்டுத்தள்ளுகிறது, இவளை காப்பாற்றச் சென்ற இந்திய உளவுப்படை.
ஆனால், மாட்டிக்கொண்டதும் மரணித்ததும் அவள் இல்லை. உயிர் தப்பி இந்தியா வந்து நடைபிணமாக வாழ்கிறாள் என்பதாக முடிகிறது கதை.
இந்தியாவை அழிக்க பாகிஸ்தான் திட்டமிடுவதாகவும் அதில் வங்க கடலில் ஏதோ ஒரு ஆபரேஷனை நிகழ்த்த உள்ளதாகவும் உளவு பார்த்து இந்தியாவிற்கு துப்பு கொடுக்கிறாள். அது ஏதோ உண்மை நிகழ்வை ஒட்டி அமைந்ததாக குறிப்பிடுகிறார்கள்.
உளவாளிகளைப் பொறுத்தவரை சென்டிமெண்ட், துரோகங்கள், குற்ற உணர்ச்சிகள் எல்லாம் பெரிய விசயமே இல்லை என்றாலும்…. இந்த படம் முழுக்கவும் இந்த மூன்று உணர்வுகளும் மிக அழுத்தமாக படம் பார்ப்பவர்கள் மனதில் பதியும்படியாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஏன் அப்படி அமைத்தார்கள் என்று தெரியவில்லை. நாட்டிற்கான சேவைக்காக பெருமைப்படுவதை விடவும் மேற்குறிப்பிட்ட உணர்வுகள் தான் நம் முன் பெரிதாகத் தெரிகிறது. ஒருவேளை ஒரு பெண் தன்நாட்டிற்காக எந்த அளவுக்கு தன் சொந்த வாழ்வை அழித்துக்கொண்டு சேவை செய்கிறாள் என்று சொல்ல வருகிறார்களோ என்னவோ….
இப்படியாக…
ஷேமத் கான் ஆகிய கல்லூரி மாணவி படிப்பை பாதியில் விட்டுவிட்டு உளவாளி மருமகளாகி கடைசியில் கணவனைக் கொல்ல தானே காரணமாகி எப்படியோ இந்தியாவிற்கு தப்பித்து வந்து சேர்க்கப்படுகிறாள்.
1971ல் நடந்த இந்த கதையை இன்றைய கடற்படை வீரர்களுக்கு ஒரு சீனியர் அதிகாரி சொல்கிறார்.
இறுதியில்….
ஷேமத் கான் மாதிரி எத்தனையோ அடையாளம் தெரியாத “Brave Hearts” நம் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்திருக்கிறார்கள்.
என்று திரையில் போடுகிறார்கள்.

Comments

Popular posts from this blog

Murugan Manthiram Profile & Songs List

சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர்.