யானையின் மீதான தேடல்

 எனக்கேன் திடீரென யானையைப் பிடிக்கிறது என்று யோசிக்கிறேன்.

அவள் தான் யானையைப் பற்றிய என் யோசனைகளுக்கு முதல் விதையைப் போட்டிருக்கிறாள்.

ஆமாம், இனி நான் யானையைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக யானை ஆச்சர்யங்கள் கொண்டதாகவே இருக்கும், அவளைப் போல.

இந்த பிரபஞ்சத்தில் நடக்கிற எந்த நிகழ்வும், அந்த நிகழ்வு விரும்பியோ விரும்பாமலோ நடப்பதல்ல... எல்லாமே ஒரு தொடர் நிகழ்வு தான்.

ஒவ்வொரு கண்ணியும் இன்னொரு கண்ணியுடன் இணைக்கப்பட்டிருப்பது தான் இந்த பிரபஞ்சத்தின் சூட்சுமம்.

விடுமுறையில் ஊருக்கு வந்தான் வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்க, குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்ட ஒருவன்,  தந்தையின் மரணத்திற்காக தனது சொந்த ஊருக்கு வந்தான். அப்போது தான் அவனுக்கு அவன் இருக்கும் கம்பெனியின் ஆசிய ஹெட் பதவி கிடைத்திருந்தது. அது கிடைத்த ஒரு மாதத்தில் தான் அப்பாவின் மரணம். 

உண்மையில் அவன் அப்பாவின் மரணத்திற்காக மட்டும் வரவில்லை. அவனது கம்பெனி வேலையாக இந்தியாவிற்கு ஒரு வாரம் விசிட் செய்ய இருந்தான். தந்தையின் மரணம் நிகழ, அதற்குமாகச் சேர்த்து கம்பெனி செலவிலே வந்து விட்டான்.

ஊரில் அவனது குடும்பம் பெரிய குடும்பம். ஆனால் அவனது மாமா வீட்டுக்கும் அவனுக்கும் நீண்ட வருடங்களாக பேச்சு வார்த்தை இல்லை. இந்த மரணம் மாமாவின் குடும்பத்துடன் இருந்த பகைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

மாமா மகனுடன் புதிதாக ஒரு நட்பு உருவானது அவனுக்கு. மாமாவின் ஊருக்கு அருகில் இருக்கும் மலை அருவியில் சென்று நல்ல குளியல் ஒன்று போடலாம் என்று அழைத்தான். அவனும் வெளிநாட்டின் வாழ்பவன் என்பதால், அந்த அருவியில் குளிக்க ஆசையாக இருந்தான்.

அப்படியாக அருவிக்கு குளிக்க சென்று ஆனந்தமாக குளித்தார்கள். அருவிக்குளியலுக்கு முன் தான் கொண்டு வந்த வெளிநாட்டு சரக்கை மாமா மகனுடன் சேர்ந்து குடித்துக் கொண்டாடினர். உண்மையில் மிகச்சிறப்பாக இருந்தது அந்த அருவி பயணம். 

அருவி பயணத்திற்கு முன்பே, பல வருடங்களாக பேசாமல் இருந்த மாமா குடும்பத்தினருடன் மனக்கசப்பு மறந்து பேசுவதும், அங்கே புதிதாக முளைத்திருக்கும் உறவுகள் பேரப்பிள்ளைகளுடன் விளையாடியதுமாக அது ஒரு புது அனுபவமாக இருந்தது.

அப்பா இருக்கும் போதே இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால், அப்பா உயிரோடு இருந்தால் இப்படி ஒன்று நடக்க அனுமதிக்க மாட்டார் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.

வெளிநாட்டில் இருந்த தனது மனைவி, மகள், மகனுக்கு வீடியோ கால் செய்து உறவுகளை அறிமுகம் செய்தான். அவர்களுடன் பேச வைத்தான். இப்படித் தெரிந்திருந்தால் நாங்களும் வந்திருப்போமே என்று மகிழ்ந்தார்கள் அவன் குடும்பத்தினர்.

இப்படியாக அவனுக்கு இந்த இந்தியப்பயணம், மிக மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது. இவ்வளவுக்கும் இன்னொரு சந்தோஷ நிகழ்வும் நடந்தது. இந்தியாவின் அதிமுக்கியமான கம்பெனி ஒன்றின் சிஇஓ கம் ஓனர் ஒருவர் அவனை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தார். கிட்டத்தட்ட அந்த டீல் வெற்றி தான். எல்லா பேச்சு வார்த்தைகளும் முடிந்து விட்டது. டீல் ஓகே செய்வதற்கான சந்திப்பு தான் அது.

அருவிக்குளியலுக்குப் பின் ஜாலியாக திரும்பிய அவர்களின் கார், மலைப்பாதையில் இருந்து மெயின் ரோட்டில் திரும்புகையில் இவர்களைக் கவனிக்காத லாரி ஒன்று வேகமாக மோதியது.

அவ்வளவு தான் ஒரு சில நொடிகளில் அனைத்தும் நடந்து முடிந்தது. காருக்குள்ளிருந்த 3 பேர் ஸ்பாட் அவுட்.

///

இதில் இருக்கும் சங்கிலியையும் கண்ணிகளையும் பாருங்கள்.

அப்பா மரணம் வர வைத்தது.

அப்பா மரணமே, மாமா குடும்பத்தின் பகையை முடித்தது.

பகை முடிந்ததால் நட்பு ஏற்பட்டது.

நட்பு ஏற்பட்டதால் அருவிப்பயணம் உண்டானது.

நட்பு ஏற்பட்டதால் ஃபாரின் சரக்கு பரிமாறப்பட்டது.

அருவியில் குளிக்க சென்றதால் அவன் மரணிக்க நேர்ந்தது.

இதில் எது ஒன்று நடக்காமல் இருந்திருந்தாலும் அவன் இறந்திருக்க மாட்டான். 

இது இவன் பக்க சங்கிலித் தொடர் என்றால் அந்த லாரிக்கும் ஒரு சங்கிலித் தொடர் இருக்கும்.

ஆக, ஒவ்வொன்றும் இன்னொரு கண்ணியில் கட்டப்பட்டுக் கிடக்கிறது. தனி கண்ணிகள் சங்கிலி ஆகாதே.

//

ஆமாம் இதில் யானைக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கிறது.

அதைப் பிறகு பேசுவோமோ?


முருகன் மந்திரம்



Comments

Popular posts from this blog

Murugan Manthiram Profile & Songs List

எனது பா‌டல்‌ கே‌ளுங்‌கள்‌....