சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர்.


சாதி முரண், என்பது சாதாரணமானதல்ல, அது ஒரு உளவியல் போர். 

யாரையும் எதிர்த்து நிற்பது என் நோக்கமல்ல, உங்களுடன் கைகோர்த்து உங்கள் பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதையே நான் விரும்புகிறேன்.

- பா. இரஞ்சித்
 



அம்பேத்கரைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. மானுடத்தை, சமூக நீதியை, சமூக சமத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாத எவராலும் நிச்சயமாக அம்பேத்கரைப் புரிந்துகொள்ளவே முடியாது. புரிந்துகொள்வதே அத்தனைக்கடினம் என்றால், அம்பேத்கர் வழி நடப்பதென்பது இன்னும் கடினமானது. சுயசாதிப் பெருமைகள், சுயமத தம்பட்டங்கள், ஆணாதிக்க மனோபாவங்கள், வர்க்க பேதங்கள், பாலின பேதங்கள், உழைப்புச்சுரண்டல்... இப்படி அனைத்தையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு அம்பேத்கர் வழி நடப்பதென்பதும் நடப்பதாக காட்டிக்கொள்வதும் கேலிக்கூத்தாகவே இருக்கும். ஏனெனில் அம்பேத்கர் அப்படிப்பட்ட ஒரு ஆளுமை அல்ல. அம்பேத்கர் வேறு எவரும் நிகரில்லாத ஒரு மானுட சிந்தனையாளர். சமகாலத்தில் அம்பேத்கரைப் பற்றிய சரியான புரிதலோடு அம்பேத்கரின் வழியில் நடக்கும் மிகச்சிலரில் முக்கியமான ஒருவராக சகோதரன் பா.இரஞ்சித்தைப் பார்க்கிறேன். தன் ஒவ்வொரு அசைவிலும் அம்பேத்கரின் வழி அரசியலை முன்னெடுக்கிற முயற்சியும் அரசியல் தெளிவும் பேச்சுத்துணிவுமாக பா.இரஞ்சித் ஒரு சினிமா கலைஞன் என்பதைத்தாண்டி மிகப்பெரிய சமூக ஆளுமையாக சிந்தனையாளனாக வளர்கிறார். தன்னைச்சுற்றி இருப்பவர்களையும் அம்பேத்கரின் பாதையில் பயணிக்க வைக்கிறார்.

இயக்குநராக தன் படங்களில் மனித மாண்பை மீட்டெடுக்கும் அரசியலைப் பேசிய பா.இரஞ்சித், இப்போது அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறார். நீலம் புரொடக்ஸன்ஸ் என்ற தனது திரைப்பட தயாரிப்பு நிறுவத்தின் முதல் படமாக "பரியேறும் பெருமாள்" படத்தை தயாரித்திருக்கிறார். தான் இயக்கும் படங்களில் மட்டுமல்ல, தான் தயாரிக்கும் படங்களிலும் தான் விரும்புகிற அரசியல் இருக்கும், இருக்கவேண்டும் என்று விரும்புகிறார், பா.இரஞ்சித். அதன்படியே பரியேறும் பெருமாள் படமும் இருக்கும் என்கிறார். அதனால் தான், அவரைப்போலவே அவர் விரும்புகிற அரசியலைப்பேசும் ஒருவரான மாரி செல்வராஜை தன் முதல் தயாரிப்பின் இயக்குநராக்கி இருக்கிறார். பா. இரஞ்சித்தின் இந்த பயணம் தமிழ் சினிமாவோடு மட்டுமே தொடர்புடையது அல்ல, அது தமிழர்கள் என்கிற இனத்தின் வாழ்வியலோடும், வாழ்வியல் முரண்களோடும் நேரடித் தொடர்புடையதாகவும், அந்த முரண்களை உடைத்து இணக்கத்தையும் சமத்துவத்தையும் வேண்டுவதாகவும் விரும்புவதாகவும் அமையும். அந்தவகையில் தமிழ் சினிமா என்கிற மக்கள் ஊடகம், தன் ஒரு மறுமலர்ச்சியை நோக்கி பயணிக்கப்போகிறது என்பது மிக மகிழ்வான செய்தி.  

பா. இரஞ்சித் அம்பேத்கரை மட்டுமே முன்னோடி என்கிறார், முன்னிலைப்படுத்துகிறார்... என்று சிலர் பதறித் தவிக்கிறார்களாம். அது தேவையற்ற பதட்டம் மட்டுமல்ல, முட்டாள் தனமான பதட்டமும் கூட. அம்பேத்கரை முன்னோடி என்பதால் மற்றவர்கள் வேண்டாம் என்பதோ இல்லை என்பதோ பொருள் அல்ல. ஆனால், அம்பேத்கருக்குள் அம்பேத்கரியத்திற்குள் நீங்கள் விரும்புகிற அத்தனை தலைவர்களின் கொள்கைகளும் அரசியலும் கருத்தியல்களும் இருக்கின்றன... என்பது அம்பேத்கரை வாசித்தவர்களுக்கும் அம்பேத்கரைப் புரிந்தவர்களுக்கும் தெரியும். முதலில் அம்பேத்கரை வாசியுங்கள், அம்பேத்கரைப் புரிந்துகொள்ளுங்கள். பின்னர் பேசுங்கள். விவாதியுங்கள்.


பா.இரஞ்சித் எவ்வளவு ஆழமான அம்பேத்கரை புரிந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு பரியேறும் பெருமாள் பத்திரிகையாளர் சந்திப்பில் பா.இரஞ்சித் பேசியதே போதுமானதாக இருக்கிறது. மேலும் மேலும் முரண்களை சிக்கலாக்கி, பிரிவினையைத் தூண்டுபவராக இரஞ்சித் இல்லை. மாறாக, அவர் அனைவரையும் அழைக்கிறார். நமக்குள் பிரச்சினை என்றால் நாம் தான் பேசிக்கொள்ளவேண்டும். வாங்க, உட்கார்ந்து பேசுவோம், சரி செய்வோம் என்கிறார். ஆம், அதுவே அம்பேத்கர் வழி.
 

- முருகன் மந்திரம்
------------------------------------------------------
பரியேறும் பெருமாள் திரைப்பபடத்தின்  பத்திரிகையாளர் சந்திப்பில் பா,இரஞ்சித் பேச்சு...
------------------------------------------------------
ஒரு தத்துவம் என்பது நமக்கு முன்னால் உறுதியாக வாழ்ந்தவர்களில் இருந்தே பிறக்கிறது. அப்படி எனக்கு முன்னோடியாக புரட்சியாளர் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது.  அது சுயசாதி பெருமை பேசுவதோ, ஆண்ட சாதி பெருமை பேசுவதோ கிடையாது.
எனக்கு அம்பேத்கரின் துயரமான நாட்கள் தான் எப்போதும் நினைவில் இருக்கும். இந்த இந்திய சமூகத்தில், முக்கியமாக சுதந்திர போராட்ட காலத்தில், ‘இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும், ஆனால் காலணியாதிக்கத்திற்கு முன்பிலிருந்தே இந்த மண்ணில் அடிமைப்பட்டுக் கிடக்கிற மக்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும்?’ என்று அம்பேத்கர் கண்ட கனவு தான் என்னை இன்று வழிநடத்திக் கொண்டிருக்கிறது. என்னை மட்டுமல்லாமல், என்னைப் போல பலரையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறது

அவர் ஒரு விசயத்தை வேதனையோடு சொன்னார். ‘நான் யாரை நம்பி இருந்தேனோ அவர்கள் என்னை கைவிட்டுவிட்டார்கள். நான் யாருக்காக போராடினேனோ, அந்த போராட்டத்தால் யாரெல்லாம் பலன் அடைந்தார்களோ வர்கள் எல்லாம் என்னை கைவிட்டு விட்டார்கள். நான் கஷ்டப்பட்டு ஒருதேரை ஒரு இடத்தில் நிறுத்தி இருக்கிறேன். எனக்குப் பின் வருபவர்கள் இந்தத் தேரை இழுப்பவர்கள் முன்னோக்கி இழுக்காவிட்டாலும் பரவாயில்லை, தயவுசெய்து அதைப் பின்னோக்கி தள்ளி விடாதீர்கள்என்று கவலையோடு சொன்னார்.

அந்தத் தேரை பின்னோக்கி நகராமல் முன்னோக்கி நகர்த்துகிற ஒரு ஆளாக நிச்சயமாக நான் இருப்பேன். எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, திரைப்படம் மற்றும் கலை இலக்கியத்தின் வழியே அந்தத் தேரை முன்னோக்கி நகர்த்தும் வேலையைச் செய்வேன். இந்த மனித சமூகத்தில் இருக்கிற ஏற்றத் தாழ்வை, சாதி முரணை உடைப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் நான் பயன்படுத்துவேன்

என் மீது இதனால் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன, நிறைய பேர் என்னைப் பற்றி பேசலாம். அவற்றையெல்லாம் அம்பேத்கர் சொன்னது போல, அவதூறுகளை புறந்தள்ளிக் கொண்டே இருப்பேன். காரணம், அவதூறுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அதே நேரத்தில் நேர்மையான விமர்சனத்திற்கு, எப்போதும் பதில் தேடிக்கொண்டே இருப்பேன். அப்படி தேவையில்லாத அவதூறுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுத் தான் நீலம் பண்பாட்டு மையம், நீலம் புரொடக்ஷன்ஸ் போன்ற நிறைய விசயங்களை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

இதன் மூலம் இந்த சமூகத்தில் நிலவுகிற முரணை உடைக்க முடியும் என நம்புகிறேன். அந்த நம்பிக்கையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் தான்பரியேறும் பெருமாள்”. 

என்னால் முடிந்தவற்றை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் சிறு வயது முதலே எனக்குண்டு. அந்த எண்ணம் தான் இப்போதும் என்னை இயக்குகிறது. அந்த வகையில் நான் நம்புகிற தத்துவத்திற்கு எதிராக ஒருபோதும் நிற்கக் கூடாது என்கிற உறுதியோடு இருக்கிறேன்.
அதே போல தனியொரு குழுவாக ஒதிங்கி விடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். வெகுஜன ஊடகங்களுக்கு மத்தியில் தான் எனது உரையாடல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். காரணம், இந்த உரையாடல் சம்பந்தப்பட்ட இருவரிடத்தில் நடந்தால் மட்டுமே இந்த சமூக முரணை உடைக்க முடியும். அந்த அடிப்படையில் தான் எனது திரைப்படங்களை வடிவமைக்கிறேன்.

என்னைச் சுற்றி இருப்பவர்கள் அளிக்கிற நம்பிக்கையும், உத்வேகமும் தான் என்னை தைரியமாக இயங்க வைக்கிறது. இங்கிருக்கிற முரண் என்பது சாதாரணமானது இல்லை, அது ஒரு உளவியல் போர்

இந்நேரம் எனது பேச்சு, உங்களுக்கு அடிப்படையில் ஒரு சாதிவெறியனாக என்னை நினைக்க வைத்திருக்கும். ஆனால், சாதியை எதிர்ப்பவனுக்கும், சாதியை ஆதரிப்பவனுக்கும் வித்தியாசமில்லாத சமூகத்தில் தான், தொடர்ந்து சாதியை எதிர்த்து வருகிற ஒருவனை சாதிவெறியனாக மாற்றுகிற சூழல் இருக்கிறது. அதனை எதிர்ப்பதற்கே ஒரு மனநிலை வேண்டும். அந்த மனநிலையை கடப்பதற்கு எனக்கு சில துணை தேவைப்படுகிறது. 
யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத் தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும். ஒரு தயாரிப்பாளராக இந்தப் படம் என முழு திருப்தியை கொடுத்திருக்கிறது. அந்தளவிற்கு மாரி செல்வராஜ் சமரசமில்லாத ஒரு சினிமாவை உருவாக்கித் தந்திருக்கிறார்.

மொத்தத்தில் எனக்கு பிடித்த, நான் நம்புகிற சினிமாவாக பரியேறும் பெருமாள் வந்திருக்கிறது.

------------------------

இம்மாதம்(செப்டம்பர்) 28ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் பரியேறும் பெருமாள்... கொண்டாடப்படவும் கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கவும் வாழ்த்துவோம்.

நன்றி: பா. பிரேம் மற்றும் திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் இரா.குமரேசன், குணா

#PariyerumPerumal #NeelamProductions #PaRanjith #MariSelvaraj #MuruganManthiram #MMCinema #MMArticles

Comments

  1. பா.ரஞ்சித் அண்ணனுக்கு நன்றியும் பாராட்டுகளும்!!!
    அனைவரும் கரம் கோர்த்து ஓரணியில் பயணிப்போம்!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Murugan Manthiram Profile & Songs List