தலித் அரசியல்: தன்னம்பிக்கையும் தடுமாற்றமும்
தலித் அரசியல்:
தன்னம்பிக்கையும் தடுமாற்றமும்
"ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்!".
- அம்பேத்கர்
இந்திய யூனியன் முழுவதும் தலித்துகள் பெருமளவில் விழிப்படைந்து கொள்ளும் ஒரு நிலை சற்று சமீப காலத்திற்கு முன் தொடங்கியது. இப்போதும் அது வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆனால் அப்படி ஒரு சூழல் உருவாகும் போது அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றி ஆராயாமல் வெறுமனே உணர்வு வயப்பட்ட நிலையில் மட்டுமே தலித் அரசியல் செய்பவர்கள் மற்றும் தலித் அரசியல் பேசுபவர்கள் இருக்கிறார்கள் என்று தான் நான் கூறுவேன்.
தலித் அரசியல் செய்பவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே தவிர
அதை மிக துல்லியமாக கண்டுபிடித்துவிட்ட தலித் அரசியலின் எதிர் அரசியல்காரர்கள் அதை நீர்த்துப் போகச் செய்வதற்கு பன்முனை தாக்குதல் நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட அந்த விழிப்பு நிலையை திசை மாற்றுவதில் அவர்கள் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
தலித்துகளுக்கு, தங்களுடைய விழிப்பு நிலையை பற்றி தெளிவான புரிதல் இல்லாமை ஒரு பக்கம், அந்த விழிப்பு நிலையை அடுத்த கட்டத்திற்கு எப்படி எடுத்துச் செல்வது என்ற திட்டமிடல் நிகழாமை இன்னொரு பக்கம் என ஏற்கனவே பலவீனமாக இருப்பதோடு எதிர் அரசியலின் சூழ்ச்சிகளை முன் அனுமானிப்பதிலும் அதை எதிர்கொண்டு முறியடிக்க முடியாமலும் திணறிக் கொண்டிருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக் கொள்ளும் போது தான் அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்க முடியும். திட்டமிட முடியும்.
அடுத்த கட்டத்திற்கு தலித் அரசியலை எடுத்துச் செல்வதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முதன்மையான சிக்கலாக நான் பார்ப்பது தலித் அரசியலின் கட்டமைப்புதான்.
ஒரு இயக்கம் அல்லது அமைப்பு அதன் கட்டமைப்பை கொண்டே தொடர் வளர்ச்சி காணமுடியும். சமூகத்தில் தங்களுக்கான இடத்தையும் செல்வாக்கையும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
ஒரு அரசியல் குழுவின் அல்லது ஒரு கட்சியின் கட்டமைப்பை முடிவு செய்வதில் அந்தக் கட்சியின் கொள்கையும் கருத்தியலும் முதன்மையான காரணிகளாக இருக்கின்றன.
மனித இனத்தை பொருத்தவரை பெருமளவிலான மக்கள் கூட்டத்தை சேர்ப்பது என்பது "ஒருவகையான ஒரே வகையான" உணர்ச்சியை மக்களிடையே உருவாக்குவதன் மூலமாக மட்டுமே சாத்தியம் என்று வரலாறு சொல்கிறது.
அதாவது அந்த அரசியல் குழுவின் மொத்த உறுப்பினர்களையும் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும்
ஒரே மாதிரியாக யோசிக்க வைக்கும் ஒரு உளவியல் சூழ்நிலையை உருவாக்குவது.
ஏனெனில் நோக்கம் என்பது ஒன்றாக இருந்தால், ஒரே ஒரு குறிக்கோளை நோக்கி பயணித்தால் அந்த இலக்கை அடைவது எளிதாகும்.
ஆகவே ஓர் இலக்கு என்ற உளவியலை தன் தொண்டர்கள் மத்தியிலும், கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும், தங்களை நம்பும் மக்கள் மத்தியிலும் உருவாக்கவே அந்த அரசியல் அமைப்பு முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அதையே முதன்மை ஆயுதமாக கொள்ள வேண்டும்.
அந்த ஓர் இலக்கு எது என்பது பற்றிய தெளிவும், அதை ஏன் நாம் அடைந்தே தீரவேண்டும் என்ற தொடர் பரப்புரையும் உணர்வூட்டுதலும் தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்க வேண்டும்.
அந்த ஓர் இலக்கு எது என்பது பற்றிய தெளிவு முதன்மையான தேவை என்றாலும் "அந்த இலக்கை அடைவதற்கான சாத்தியங்கள்" பற்றிய தொடர் ஆய்வும் அதற்கான திட்டமிடல்களும் மிக மிக அவசியம்.
இங்குதான் தலித் அரசியல் தடுமாறுகிறது என நான் உறுதியாகக் கூறுவேன்.
ஒரு பெரும் மனித கூட்டத்தின் உளவியலை ஒரே மாதிரியானதாக எப்படி மாற்ற முடியும்?
ஒரு பெரும் மனித கூட்டத்தின் உளவியல் எப்போது ஒரே ஒரு இலக்கை நோக்கியதாக இருக்கும்?
வரலாற்றில் பெருமளவு மனித கூட்டங்கள் ஒரே நோக்கத்தோடு எப்போதெல்லாம் திரண்டிருக்கிறார்கள்?
அந்த மக்கள் திரட்சி என்பது எப்படி உருவானது? அல்லது எதன் அடிப்படையில் நிகழ்ந்தது?
வரலாற்றில் எத்தனை மனித திரட்சிகள் திட்டமிட்டு சக மனிதர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது?
தன்னெழுச்சியாக உருவான மக்கள் திரட்சி அல்லது மக்கள் புரட்சியின் பின்புலமாக பின்னணி காரணிகளாக எவை எவை இருந்தன?
தன்னெழுச்சியாக உருவான மக்கள் புரட்சி, சக மனிதர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட மக்கள் திரட்சி, இந்த இரண்டுக்கும் அடிப்படையில் என்னென்ன ஒற்றுமைகள் வேற்றுமைகள் இருந்தன?
மக்கள் திரட்சி எவ்வளவு காலம் நீடித்தது? மக்கள் புரட்சி எவ்வளவு காலம் நீடித்தது?
எது அதிக காலம் நீடித்தது? எப்படி நீடித்தது அல்லது நீட்டிக்க வைக்கப்பட்டது?
அப்படி அந்த மக்கள் புரட்சியோ மக்கள் திரட்சியோ நடந்ததால் ஏற்பட்ட லாப நஷ்டங்கள் என்னென்ன? அவர்கள் எதற்காக திரண்டார்களோ அது நடந்ததா?
இதைப் புரிந்துகொள்ள "உங்களுக்கு தெரிந்த இரண்டு அல்லது மூன்று சம்பவங்களை" எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கண் முன் நிகழ்ந்தில், அல்லது நீங்கள் வாழும் காலத்தில் நிகழ்ந்ததில்
எதை நீங்கள் மக்கள் திரட்சி என்று நினைக்கிறீர்களோ, எதை நீங்கள் மக்கள் புரட்சி என்று நினைக்கிறீர்களோ அந்த சம்பவங்களை நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.
அது இந்தி எதிர்ப்பாக இருக்கலாம், ஜல்லிக்கட்டு ஆகக்கூட இருக்கலாம், நீட், ஸ்டெர்லைட், மீத்தேன், அணுஉலை.... இந்த பட்டியல் நீங்கள் அறியாததல்ல.
இவற்றைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இல்லை... உங்கள் காலத்தில் நிகழ்ந்ததாக இருந்தால், அதுபற்றிய பாரபட்சமற்ற அரசியல் புரிதல், தகவல் அறிவு உங்களுக்கு இருந்தால், எதுவெல்லாம் மக்கள் புரட்சி என்று நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். எதுவெல்லாம் மக்கள் திரட்சி என்றும் நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
அவை எப்படி நிகழ்ந்தது நிகழ்த்தப்பட்டது என்பதை ஓரளவுக்கு நீங்கள் அனுமானித்துக் கொள்ள முடியும். அதோடு இவையெல்லாம் தன் இலக்கை அடைந்ததா என்றும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். உறுதி செய்ய முடியும்.
இலக்கை அடைந்தவை அல்லது வெற்றி பெற்றவை எல்லாம் எப்படி வெற்றி பெற்றன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். வெற்றியை முடிவு செய்தது அல்லது தீர்மானிப்பது யார் யார்? எந்தெந்த அதிகார அமைப்புகள் என்பதை நீங்கள் துல்லியமாக தெரிந்துகொள்ள முடியும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல் திருமாவளவன் அவர்கள், "மெரினா புரட்சி" திரைப்பட மேடையில் பேசும் போது ஜல்லிக்கட்டு மக்கள் திரட்சி பற்றி இப்படி குறிப்பிட்டிருப்பார்.
"தமிழ் சமூகத்தின் வரலாற்றில்... பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடிய ஒரு புரட்சி... நிகழ்வு என்று ஜல்லிக்கட்டு ஒன்று கூடலைக் குறிப்பிட முடியாது".
என்கிறார். கூடவே...
ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் எனில் அரசின் அனுமதியையும் காவல்துறையின் அனுமதியையும் பெற்றால் மட்டுமே இங்கு நடத்த முடியும். அதையும் தாண்டி அனுமதி இல்லாமல் நடத்த முயன்றால் இன்றைக்கு இருக்கும் தொலைத்தொடர்பு வசதிகளை கொண்டு காவல்துறையினர் சில நிமிடங்களில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து விடுவார்கள். கலைத்து விடுவார்கள்.
அதிலும் ஜல்லிக்கட்டு ஒன்றுகூடல் தொடங்கிய, காமராஜர் சாலை என்பது எப்போதும் அரசியல் தலைவர்கள் பயணிக்கும் சாலை என்பதால் காவல்துறையினர் அங்கே ஏற்கனவே இருப்பார்கள்.
அப்படிப்பட்ட ஒரு இடத்தில் முதல் 24 மணி நேரங்கள் அனுமதி பெறாமல் ஒரு போராட்டம் எப்படி நடைபெற்றது, எப்படி நடத்த முடிந்தது, 200 எழில் தொடங்கி ஆயிரம் பேராக கூடியவர்களை அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு "அன்றைய அரசும் காவல்துறையும் அவ்வளவு பலவீனமாக இருந்ததா" என்றும் அவர் கேட்கிறார்.
"உலகத்தில் நடக்கிற எல்லா புரட்சிக்கு பின்னாலும், ஏதேனும் ஒரு வகையில் ஆளும் வர்க்கத்தின் கை இருக்கிறது. அது நமக்கு ஆதரவான புரட்சியாக இருக்கலாம், அல்லது எதிரானதாக இருக்கலாம், அது நாம் விரும்புகிற புரட்சியாக இருக்கலாம் அல்லது நாம் விரும்பாத புரட்சியாக இருக்கலாம், ஆனால் அதில் அரசின் கை இருக்கிறது. அரசின் துணை இருக்கிறது. அல்லது அரசு அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. இதிலுள்ள நுட்பத்தை புரிந்து கொள்வதுதான் அரசியல்".
என்றும் திருமாவளவன் கூறுகிறார்.
இப்போது உங்களுக்கு முழுவதும் புரிந்திருக்கும் என்று கூறமுடியாது, ஆனால் புரிய தொடங்கியிருக்கலாம். இது பற்றி மேலும் யோசித்தால் தகவல்கள் தேடினால் "உண்மையில் ஜல்லிக்கட்டு பெயரில் நடந்தது, தன்னெழுச்சியான மக்கள் புரட்சியா?" என்பதை நீங்கள் விவரமாக புரிந்து கொள்ள முடியும்.
மீண்டும் நாம் மக்கள் புரட்சி அல்லது மக்கள் திரட்சி பற்றிய நமது புரிதலுக்கு வருவோம்.
மேலுள்ள உதாரண சம்பவத்தை வைத்து பார்க்கும் போது தலித் அரசியல் மக்கள் புரட்சியின் வழியாக மக்கள் திரட்சியின் வழியாக எதையும் சாதிக்க முடியும் எனில் முதலில் மக்களை திரட்ட வேண்டும்.
மக்களை
திரட்டுவதற்கு ஒரு "ஒற்றை இலக்கு" வேண்டும்.
அந்த ஒற்றை இலக்கு எது என்பதுதான் இப்போது கேள்வி.
ஏனெனில் தலித் அரசியல் எப்போதுமே "ஒற்றை இலக்கு" கொண்டதாக இல்லை.
ஒற்றை இலக்கு கொண்டதாக இல்லை என்பதே தலித் அரசியலிலின் ஆகப்பெரிய பலவீனம்.
அதனால் தான், தலித் அரசியல் சார்ந்த அனைத்தும் ஒன்றாக இல்லாமல் பிரிந்து கிடக்கிறது. தலித் கட்சிகள், தலித் அமைப்புகள், தலித் மக்கள்... என அனைவருமே பிரிந்து தான் இருக்கிறார்கள்.
ஒன்றாக இருப்பதே சாத்தியம் இல்லாத போது ஒற்றை இலக்கு மட்டும் எப்படி சாத்தியம்?
"தேசப்பற்று" காரணமாக கூறி இயங்கும் அமைப்புகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்கின்றன.
தங்கள் "மதங்களின்" மீது பற்று கொண்ட அமைப்புகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்கின்றன.
தங்கள் "சாதிகளின்" மீது பற்று கொண்ட அமைப்புகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்கின்றன.
சின்னஞ்சிறியதில் இருந்து ஆகப் பெரியது வரை, அத்தனை கட்சிகள் அத்தனை அமைப்புகள் இருந்தும்... அவர்கள் இலக்கு என்பதை ஒன்றாக கொண்டு செயல்படுகிறார்கள்.
அந்த ஒற்றை இலக்கு என்பது ஒரு உணர்வு. உணர்ச்சி. ஒரு பிரிவினை. தேசத்தால் சாதியால் மதத்தால் மொழியால் தங்களை தனியாக பிரித்து உணரவைக்கும் ஒரு உளவியல்.
தங்களை மற்றவர்களில் இருந்து தனியாக தங்கள் உணர்ச்சி வழியாக பிரித்துக் கொள்வதுதான் அவர்களின் ஒற்றை இலக்கு.
நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. நாம் ஒற்றுமையாக இருப்போம் என்பார்கள்.
ஆனால் உண்மையில், அவர்கள் தங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் மனதில் ஒரு தனி உணர்வை, பிரிவினை உணர்வை ஊட்டியே எளிதில் காரியம் சாதிக்கிறார்கள்.
தாங்கள் தனி என்பதை, தனித்துவம் என்று அந்த மக்களை நம்ப வைக்கிறார்கள்.
ஒரு தேச உணர்வின் வழியாக, ஒரு மத உணர்வின் வழியாக, ஒரு சாதி உணர்வின் வழியாக, ஒரு மொழி உணர்வின் வழியாக... தாங்கள் தனியானவர்கள் என்று நம்புவதோடு, தனித்துவமானவர்கள் என்றும் இந்த மக்கள் நம்புகிறார்கள்.
இதில் எது பிரதானமோ, அந்த ஒன்றின் அடிப்படையில் தாங்கள் தனியாக இருப்பதை, மற்றவர்களிடம் இருந்து பிரிந்து இருப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள்.
அப்படி பிரிந்து இருக்கும் விருப்பத்தை, ஒற்றை இலக்காக மாற்றியே, அவர்களை வைத்து காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் அந்த அரசியல் அமைப்புகள் மற்றும் கட்சிகள்.
தனித்தனியாக பிரிந்து இருப்பதின் வழியாக, அவர்கள் அனைவரும், தங்கள் "தனி ஒற்றுமை" என்பதையும் "தங்கள் தனி நலன்" என்பதையும் மட்டுமே விரும்புகிறார்கள்.
அதாவது அவரவர் ஒற்றுமையை, அவரவரின் நலனை, அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உளவியல் அடிப்படையில்.
ஒருவகையில் பார்த்தால் அதுதான் சரி இல்லையா? அதன் மூலமாக அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு, தங்களுக்கு சாதகமான நன்மை தரக்கூடிய சமூக அரசியல் வெளியையும் அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள் இல்லையா?
அப்படி எனில் அந்த மக்கள் நினைப்பது தானே சரி!
தன் கையே தனக்கு உதவி!
அதாவது மற்றவர்களுடனான ஒற்றுமையை விட, தங்களுக்கு உள்ளான ஒற்றுமையை, தங்களின் நலனையே முதன்மையானதாக அவர்கள் கருதுகிறார்கள். கருத வைக்கப்படுகிறார்கள்.
"தாங்கள்" என்பதை, அவர்கள் தேசமாகவும் மதமாகவும் சாதியாகவும் மொழியாகவும் உணர்கிறார்கள்.
ஆனால் தலித்துகள் எதை உணர்கிறார்கள்?
"தாங்கள்" யார் என உணர வைக்கப்பட்டிருக்கிறார்கள்?
"தங்களின் நலன்" என்று எதை அவர்கள் கருதுகிறார்கள்? கருத வைக்கப்பட்டிருக்கிறார்கள்?
"தங்களின் இலக்கு", எது என்பதைப் பற்றிய தலித்துகளின் புரிதல் என்ன?
இதுவரை, தலித்துகளுக்காக இயங்கிய, இயங்கி கொண்டிருக்கும் அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள், இதுவரை தலித்துகளுக்காக போராடிய தலைவர்கள் எல்லாம் "தலித்துகளின் ஒற்றை இலக்காக" எதை முன்னிறுத்தி இருக்கிறார்கள்.
ஏன் தலித்துகள், "தலித்துகளை மட்டும்" முன்னிறுத்துகிற, "தலித்துகளின் நலனை மட்டும்" முதன்மையாக கொண்ட அரசியல் புரிதலுக்குள் வரவில்லை.
எப்படிப் பார்த்தாலும் அதுதான் தேவை இல்லையா...
ஏன் அந்த தேவையை அரசியல் புரிதலாக்கி, நோக்கமாக்கி திட்டமிடவில்லை?.
இங்குதான் முற்போக்குவாதிகள் மல்லுக்கட்ட வருவார்கள்?
அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?
இதுதான் பார்ப்பனியத்தின் வெற்றி.
அவர்களைப் போல நம்மை மாற்றுவதில் பார்ப்பனியத்தின் வெற்றி தான் இது?
இது சாதியின் வெற்றியாக முடியும்.
என்றெல்லாம் தலித் அரசியல்காரர்களும் முற்போக்குவாதிகளும் மல்லுக்கட்ட வருவார்கள்.
அதற்கு ஆதரவாக அம்பேத்கரையும் அம்பேத்கரிஸத்தையும் கொண்டு வருவார்கள்.
பெரியாரை கொண்டு வருவார்கள். கம்யூனிசத்தை கொண்டு வருவார்கள்.
எல்லாம் இருக்கட்டும்.
அவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் உணர்ந்ததை எழுதி வைத்திருக்கிறார்கள்.
ஆனால் அது அப்படியே எல்லா காலத்துக்கும் எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தும் என்று அடம் பிடிக்கக்கூடாது?
அது பகுத்தறிவு அல்ல. அது அறிவியல் அறிவும் அல்ல. அது வரலாற்று அனுபவ புரிதலும் அல்ல.
அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் சொல்லிவைத்தவை, எல்லா காலத்துக்கும் பொருந்தும் என்று அடம் பிடிப்பவர்களை நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்.
ஆனால் அவர்கள் சொல்லி வைத்ததை எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்று நீங்கள் எப்போதாவது பேசி இருக்கிறீர்களா?
இந்த சாத்தியத்தில் இப்போது எத்தனை சதவீதம் அடைந்திருக்கிறார்கள் என்று எப்போதாவது நீங்கள் ஆராய்ந்து பார்த்து இருக்கிறீர்களா?
அது நன்மையானது, அது சரியானது என்று அடம் பிடிப்பதை விட அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று ஆராய்ந்து தெரிந்து கொள்வதே பகுத்தறிவாக இருக்க முடியும். அதை சாத்தியப்படுத்த நம்மிடம் என்ன வழிகள் இருக்கின்றன, அவை எப்படி எப்போது சாத்தியமாகும் புரிந்து கொள்வது தான் ஆகப் பெரிய அரசியல் அறிவாக இருக்க முடியும்.
இந்த அடிப்படையில் ரவிக்குமார் எம்.பி.யின் சமீபத்திய சந்தேகத்தை உங்கள் முன் வைக்கிறேன்.
///
உட்சாதி அடையாளத்தைப் பேணக் கூடாது என்ற அம்பேத்கருடைய அணுகுமுறையையும், இந்த மக்களெல்லாம் பூர்வ பௌத்தர்கள் தான் என்ற அயோத்திதாசப் பண்டிதரின் அணுகுமுறையையும் இந்த ஆதி திராவிடர் என்ற பறையர் சமூகம் பின்பற்றுவதால்தான் இப்படி உதாசீனப்படுத்தப்படுகிறதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.
ரவிக்குமார், எம்.பி
///
தலித்துகள், தங்கள் "ஒற்றை இலக்கு" எது என்பதை முடிவு செய்வது குறித்தும், அதை அடைவதற்கான திட்டமிடல் குறித்தும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசர காலமிது.
அந்த இலட்சியம் எது?
- முருகன் மந்திரம்
#muruganmanthiram2020 #muruganmanthiram
#mmsocial
#mmpolitics
#DalitPolitics
#Dalits
Comments
Post a Comment